Friday, December 3, 2010

கடவுளின் சிருஷ்டியில்.....



கடவுளின் சிருஷ்டி தன்னில்
காலங்கள் மாறிப் போகும்;
இடம்,பொருள்,ஏவல் என்னும்
இலக்கணம் பொய்யே ஆகும்!

மலைகளும் மடுக்க ளாகும்;
மடுக்களும் மலைக ளாகும்;
நிலை எலாம் மாறி மாறி
நிஜங்களும் பொய்களாகும்!

தலைமுறை மாறிப் புதிய
தத்துவம் தலையைத் தூக்கி
அலைகளைப் போல தோன்றி
அடுத்ததே புதுமை யாகும்!

அறிவியல் பூர்வ மான
அதிசயம் யாவும்;இந்த
முறையினில் மாறி இங்கு
முளைப்பதே மாயையாகும்!

காலங்கள் தோறும் மாறும்
கருத்துக்கள்;கண்டுபிடிப்பு
ஜாலங்கள் எல்லாம் இந்த
ஜனங்களின் திறமை யன்று!

வரைமுறை இதுதான் என்று
வரலாறு சொன்ன தெல்லாம்
சரியென்று ஏற்பதற் குள்
சரித்திரம் மாறிப் போகும்;

கடவுளின் செயலை இங்கு
கணித்திட வழியே இல்லை;
கடவுளின் சிருஷ்டிக் காலம்
கண்டவர் யாரும் இல்லை!

கடவுளைக் கண்ணில் கண்டு
கருத்துரைத் தோர்கள் இல்லை;
கடவுளே இல்லை என்று
கர்ஜிப்போர் உண்மை இல்லை!

கடவுளின் சிலை மீதென்று
கற்களை எறிவார் தாமும்;
கற்களைக் கடவுள் என்று
கண்களைக் கசிவார்தாமும்

கடவுளின் படைப்பு என்றே
காண்கின்ற அறிவு கண்டால்
மடமையில் லாத வாழ்வில்
மனிதரைக் காண லாகும்!

அழிந்தவை இன்னோர் வடிவில்
ஆவதை அறிவியல் சொல்லும்;
அறிவியல் இதுதான் என்று
ஆன்மீகம் எடுத்துக் கொள்ளும்!

முடிவிலா சிருஷ்டி தன்னை
முற்றிலும் அறிந்து இங்கு
விடைசொல யாரும் இல்லை;
வேறன்ன,விளக்கம் சொல்ல?

-கிருஷ்ணன் பாலா
2.12.2010 / 15:00Hrs / IST

2 comments:

KALAM SHAICK ABDUL KADER said...

கண்டவர் விண்டிலர்;
விண்டவர் கண்டிலர்

V.Rajalakshmi said...

உருளையில் ஆதி அந்தமேது என்ற
பொருள் புரியா புவியை தந்தான்
அவ்ஆராய்ச்சியை அறியத்தான்
அடுத்து அடுத்து பிறவி தந்தான்
எடுத்தவனே கொடுத்து விட
ஊழ்வினை பாடம் தந்தான்
விளங்காத விளக்கங்களை
விருட்சிகமாக்கி வினா தந்தான்
அவ்விருட்சிக விதையை "ஓம்"
என்று ஒலித்து வைத்தான்!

"ஓம் நமசிவாய!"